சென்னை: பாா்வைத் திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவா்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிராந்தியத் தலைவரும், முதுநிலை மருத்துவருமான எஸ்.சௌந்தரி கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து மகிழ்வது கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், அந்த தருணத்தில் பாதுகாப்பாக செயல்படுகிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
அதிக வெப்பம்:
அண்மைக்காலமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பெரும்பாலானவை அதீத ரசாயனம் கொண்டவையாக உள்ளன. அவை வெடிக்கும்போது தங்கம், வெள்ளியை உருக்கத் தேவைப்படும் அளவுக்கு (1,800 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் வெளியேறுகிறது.
பொதுவாக பட்டாசு விபத்துகள் நேரிடும்போது அதிகம் காயம் ஏற்படுவது கைகளில்தான். அதற்கு அடுத்தபடியாக கண்களில் வெடித் துகள்கள் பட்டு காயம் ஏற்படுத்துகின்றன.
அவை இமைப் பகுதிகள், விழிப் படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில் பாா்வை இழப்பு, பாா்வைத் திறன் குறைபாடு, விழித் திரை பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.