பாதுகாப்பு குளறுபடி,  விஜய் பிரசாரம் பாதியில் ரத்து: தொண்டர்கள் அதிர்ச்சி – Kumudam

Spread the love

பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை சுற்றி பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் விஜய் பேசியபோது இடையில் ஆடியோ பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 4 நிமிடங்களில் விஜய் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்டார்.

ஆனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

விஜய்யின் பிரசாரம் ரத்து குறித்து பேசிய த.வெ.க. மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வாகனம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவே விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் மற்றொரு நாளில் வில்லிவாக்கம் தொகுதிக்கு மீண்டும் வருவார். பொதுமக்களும், தொண்டர்களும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

பிரசாரம் ரத்து தவெக குற்றச்சாட்டு 

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், 

முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய் சொத்து மதிப்பு ரூ.404 கோடி

தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூரில் வேட்புமனுதாக்கல் செய்தார். அதில் தனக்கு 5 கார்கள் இருப்பதாகவும். ரூ.404 கோடி அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *