பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவரை மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (அக். 23) கைது செய்தனர்.
இதனால், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு அக். 12 ஆம் தேதி இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் கர்ஜத் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் பாபா சித்திக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் 5 பேரில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனும் தொடர்பில் உள்ளவர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடையதாக ஹரியாணாவைச் சேர்ந்த அமித் ஹிசம்சிங் குமார் (29) என்பவரை மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இவர் மீது நிர்மல் நகர் தீ விபத்து வழக்கு உள்பட 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மும்பை காவல் துறை தெரிவித்துள்ளதாவது, பாபா சித்திக்கை சுடுவதற்காக, கர்ஜாத் – கோபோலி சாலையில் உள்ள காட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயிற்சி எடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
பலசதாரி கிராமத்தின் காட்டில் உள்ள மரத்தில் சுட்டு பயிற்சி எடுத்துள்ளனர். செப்டம்பரில் எடுத்த பயிற்சியில் 8 முதல் 10 முறை வரை மரத்தில் சுட்டு பயிற்சி எடுத்துள்ளார் என காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாபா சித்திக் கொலை நடந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஷியாம் சோனாவனேவை இடைநீக்கம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.