சேலம்: சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள் கும்பல், அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ராமதாஸ் அணியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் நடராஜ், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சின்ன கிருஷ்ணாபுரம் பூவிழி ராஜா (33), வடுகத்தம்பட்டி விக்னேஷ் (25), ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்த பாமக ஆத்தூர்வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன் (37), வாழப்பாடி செல்லியம்மன் கோயில் பகுதி சரவணன் (30), வைத்திய கவுண்டன் புதூர் அருள்மணி (32), சின்ன கிருஷ்ணாபுரம் விமல் ராஜ் (22 ), தமிழ்ச்செல்வன் (29) ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவ.19-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.