“பாமக தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாது” – ராமதாஸ் விரக்தி | PMK founder Ramadoss slams regarding Anbumani activities

1380009
Spread the love

விழுப்புரம்: “எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று( அக்.16) அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையொட்டி, இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் சீராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்கள், நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 82 பேர் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டும் நலம் விசாரித்தனர். புதிதாக தொடங்கப்பட்ட கட்சியினர் உட்பட ஓரிரு நபர்கள் மட்டும்தான் வரவில்லை. நான் ஐசியு பிரிவில் இல்லை. ஐசியு பிரிவுக்கு செல்லும் நிலை எனக்கு ஏற்படவில்லை.

ஒரு மணி நேரம் ஐசியு பிரிவில் இருப்பார், அதன்பிறகு அறைக்கு மாற்றப்படுவார், இருதய சிறப்பு மருத்துவர்களிடம் சென்று பேசினேன், அவர் 2 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என கூறியதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய பேச்சு, தமிழகத்தில் உள்ள அனைவரையும் உலுக்கியும், உறுத்தியும் இருக்கும். “அய்யாவுக்கு ஏதாவது ஆச்சு என்றால் தொலைத்து விடுவேன். சும்மா இருக்க மாட்டேன். வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என வந்துபாருங்கள் என அழைத்துள்ளனர். இதனால், யார் யாரோ வந்து செல்கின்றனர், நோய் தொற்று ஏற்படக்கூடாது, அய்யாவை வைத்து நாடகம் நடத்துகின்றனர். துப்பு இல்லாதவர்கள்” என அன்புமணி பேசி உள்ளார்.

படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட, இப்படிப்பட்ட சொற்களை கொட்டியிருக்கமாட்டார். இதனை கருத்தில் கொண்டுதான் தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என ஏற்கெனவே தெரிவித்தேன். நோய் தொற்று ஏற்படும் அளவுக்கு எனக்கு வியாதி இல்லை.

எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. என் கட்சி என கூறுவது நியாயம் இல்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை சந்திப்போம். கட்சி தொடங்கியபோது, இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது. அதன்பிறகும் தெரியாது.

பாமகவுக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர், இதுபோன்று சொல்ல உரிமை கிடையாது. எனது வளர்ப்பு சரியாக இருந்தது, இருக்கிறது என நிரூபிக்க வேண்டுமானால், 21 பேர் சேர்ந்து புதிய கட்சி தொடங்கலாம்.

அவருடன் இருக்கும் கூட்டத்துக்கு பொறுப்பு கிடைக்கலாம். எம்எல்ஏ, எம்பி பதவி கிடைக்காது. 6 மாதமாக நடைபெற்று வரும் சண்டையில், புதிய கட்சி தொடங்கிக்கொள்ளலாம் என மூன்று முறை சொல்லி உள்ளேன். கட்சிக்கு எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. இனிஷியலை போட்டுக்கொள்ள எனக்கு ஆட்சேபம் இல்லை.

சட்டப்பேரவை பாமக தலைவராக ஜி.கே.மணி மற்றும் கொறடாவாக அருள் ஆகியோர் தொடர்வார்கள். அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் போராடுவதால் எதுவும் செய்ய முடியாது. தந்தையும், தாயையும் காப்பாற்ற முடியாதவர் தமிழகத்தை காப்பாற்ற உரிமை மீட்பு பயணம் செல்கிறார் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியது 100-க்கு 101 சதவீதம் உண்மை.

அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள், இதே கருத்தைதான் கூறி உள்ளனர். கரூர் துயர சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது வழக்கை முடிக்கவா? அல்லது இழுத்தடிக்கவா? என கேட்கிறீர்கள். சோழியை போட்டுதான் பார்க்க வேண்டும்.

தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, வரும் டிசம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் எனக்கு வழங்குவர். இந்த முறை கூட்டணி சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *