பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: தமிழகம், புதுச்சேரியில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA raids 16 places in Puducherry, Tamil Nadu

1289160.jpg
Spread the love

சென்னை/ திருச்சி: மக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தமிழகம், புதுச்சேரியில் 16 இடங்களில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ பிரமுகர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் பாமக பிரமுகர் ராமலிங்கம். மத மாற்றத்தை தட்டிக் கேட்ட இவர் கடந்த 2019-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டும் வகையில், தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), எஸ்டிபிஐ பிரமுகர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகரில் உள்ள அமீர்பாஷா, துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டையில் முகமது சித்திக் (40) ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.

கும்பகோணம் மேலக்காவேரி கேஎம்எஸ் நகர் முகமது யூசுப், கும்பகோணம் அடுத்த கொரநாட்டு கருப்பூரில் முகமது பைசல், திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்தில் சகாபுதீன், திருமங்கலக்குடியில் ஹாஜியார் தெருவை சேர்ந்த இம்தியாஸ், சின்னத்தைக்கால் தெருவை சேர்ந்த முகமது ஹாலித் (பிஎஃப்ஐ), அதே பகுதியில் முகமது ஹாலித் (எஸ்டிபிஐ) என 6 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியில் ரஹ்மத்துல்லாவின் (42) வீடு பூட்டியிருந்ததால், அக்கம்பக்கத்தினரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி ரபீக், மயிலாடுதுறை மாவட்டம் வடகரை நவாஸ்கான், தேரழுந்தூர் பகுதி முகமது பைசல், குத்தாலம் அடுத்த மாந்தை கருப்பூரில் நவாசுதீன், திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த கம்பூர் பகுதியில் நவாசுதீன் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தமானியா தெருவில் வழக்கறிஞரும், பிஎஃப்ஐ பிரமுகருமான ராஜ்முகம்மது (40) வீட்டில் சோதனை நடைபெற்றது. விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அவரிடம் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியில் அசரப் அலி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் செல்போன், சிம்கார்டு, லேப்டாப், பல்வேறு முக்கிய ஆவணங்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *