ராமேசுவரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேசுவரத்தில் இருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டு நூறாண்டுகளை கழிந்து விட்டதாலும், பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கன்னியாகுமரியில் 01.03.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. 31.09.2021க்குள் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
ராமேசுவரத்துக்கு ரயில் சேவை நிறுத்தம்: முன்னதாக, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 19 மாதங்களுக்கு மேலாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நீளம் 2078 மீட்டர். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களைக் கொண்டது. பாலம் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்தத் தூண்கள் இடையே ஒரு வழித்தடத்துக்கான 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்களில் மண்டபம் பகுதியில் தூக்குப் பாலம் வரையிலுமான 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன.
புதிய ரயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமானது. இது பழைய ரயில் பாலத்தை விட சுமார் 1 1/2 (ஒன்றரை) மீட்டர் உயரம் அதிகம் என்பதால், பாம்பன் பக்க நுழைவுப் பகுதியியிலும் தண்டவாளங்ளும், சிலிப்பர் கட்டைகளும் அகற்றிவிட்டு இருப்புப் பாதையை உயரமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்குத்து தூக்குப் பாலம்: பாம்பன் சாலைப் பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அருகில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே பாம்பன் பாலம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக மண்டபம் – ராமேசுவரம் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும். இதற்காக, செப்டம்பர் 30-க்குள் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து வகையான பரிசோனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும், டிசம்பர் 31-க்குள் ராமேசுவரம் வரையிலும் மின்சார ரயில்களை இயக்குவதற்கு தேவையான மின்சார இன்ஜின்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.