பாம்பன் புதிய ரயில் பாலத்தை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி நவ.13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம் பாம்பன் ரயல் பாலம் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டதால் அதன் அருகே புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி, 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி தற்போது முடிவடைந்துள்ளது. புதிய ரயில் பாலம் 2,078 மீ நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீ உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் இரு புறமும் தூக்கும் வகையில் இருக்கும். இதற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலம் போன்று புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல் ரயில்வே தூக்குபாலம்.
சமீபத்தில் புதிய பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டும், செங்குத்து பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய தேதிகளில்ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா். முதல் நாள் மண்டபம் – பாம்பன் இடையே உள்ள ஒற்றை அகல ரயில் பாதை, பாம்பன் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலத்தின் இயக்கம் குறித்து ஆய்வு செய்வாா்.
தொடா்ந்து 2-ஆம் நாள் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை பாம்பன் – மண்டபம் இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள் பாம்பன் – மண்டபம் இடையே உள்ள ரயில் வழித்தடங்கள் அருகில் வருவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.