ராமேசுவரம்: ராமேசுவரம் பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் 2 மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டம் துவங்கும், என ரயில்வே வாரியத்தின் உள் கட்டமைப்பு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் கூறியுள்ளார்.
01.03.2019 அன்று புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 05 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. கரோனா பரவல், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களினாலும் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.
தற்போது புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே தூக்கு பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள், சில கர்டர்களும் அவற்றின் தண்டவாளங்களை பொறுத்தும் பணிகளும் நிலுவையில் உள்ளன. மேலும் இந்த புதிய பாலப் பணிகளால் கடந்த 20 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு மண்டபத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால், வியாழக்கிழமை பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்ட வழித்தடம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் நிறைவடைந்து புதிய ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும். பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலம் மிகவும் பழமையானது என்பதுடன், தற்போது அதன் உறுதித் தன்மை குறைந்து கொண்ட வருகிறது.
ஒவ்வொரு முறையும் புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும் பழையப் பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது. மேலும், பழைய ரயில் தூக்குப் பாலத்தை அகற்றுவது, அதை காட்சிப் படுத்துவது குறித்து ரயில்வேத்துறை சார்பாக பொது மக்களி கருத்துக்களிடம் கருத்துக்களை கேட்டப்படும்.
ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் பாதைக்கு தேவையான நில கையகப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சில அனுமதி பெற உள்ளதால் அவை முடிந்த பின்னர், விரைவில் ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கும்,என அனில் குமார் கூறியுள்ளார்.