பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபம் – ராமேசுவரம் இடையே சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் | Test run of freight train between Mandapam – Rameswaram on Pampan new railway bridge

1327065.jpg
Spread the love

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் – ராமேசுவரம் இடையே சரக்கு ரயிலை இயக்கி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ராமேசுவரத்திற்கு வரும் ரயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்பட்டுவருகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப் பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் -ராமேசுவரம் இடையே இன்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபத்திலிருந்து பகல் 1.37 மணிக்கு ஒரு இன்ஜினுடன் காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் ராமேசுவரத்திற்கு 2 மணியளவில் வந்தடைந்தது. முதலில் 30 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ வேகம், 60 கி.மீ வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்டவாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. விரைவில், முதன்மை ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரயில் பாலம் ஆய்வு நிறைவைடந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *