பாரதிதாசன் பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு: ராமதாஸ் கண்டனம் | Due to the negligence of Bharathidasan University, students are suffering from not being able to join higher education says Ramadoss

1297180.jpg
Spread the love

சென்னை: பாரதிதாசன் பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து, 2023-24ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு இன்னும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச் சான்றிதழும் (Provisional Certificate) வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜூன் 26-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன் பின் இன்றுடன் 54 நாட்கள் நிறைவடைந்து விட்டன . ஆனால், தற்காலிகப் பட்டச்சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாததால், பட்டப்படிப்பு தகுதியின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் இன்னும் வேலைக்கு சேர முடியவில்லை; அதேபோல், உயர்கல்வியில் சேர தகுதி பெற்ற மாணவர்கள் தற்காலிகப் பட்டச் சான்று இல்லாததால் அந்த இடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்காதது மட்டுமின்றி, அதற்கான காரணத்தைக் கூட இன்னும் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, தற்காலிகப் பட்டச் சான்றிதழை வழங்க இன்னும் ஒரு மாதம் ஆகும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. குறித்த காலத்தில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ் வழங்கும் அடிப்படைப் பணியைக் கூட செய்யாமல், மாணவர்களின் எதிர்காலத்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.

மாணவர்களின் எதிர்காலத்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளையாடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் வரை தற்காலிகப் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை.

அதை சுட்டிக்காட்டி 11.11.2023-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு தான் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிக தகுதிச் சான்றுகளை வழங்கியது. அதிலிருந்து கூட பாடம் கற்காமல் நடப்பாண்டிலும் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிப்பதை மன்னிக்க முடியாது.

மாணவர்கள் பட்டம் படிப்பதன் நோக்கம் உயர்கல்வி கற்கவும், வேலைகளுக்கு செல்வதற்காகவும் தான். அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழையும், தற்காலிகப் பட்டச் சான்றிதழையும் வழங்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *