பாருவிற்கு வார்டன் பதவி கொடுத்தாலும் கொடுத்தார்கள். இன்றைய நாள் முழுக்க அவருக்கு சோதனை. ‘வார்டன்னா அடிப்போம்’ மோமெண்ட்டில் மாணவர்கள் இருந்தார்கள். சின்ன விஷயத்தைக் கூட ஊதிப்பெருக்கி மூன்று பிரமோக்களிலும் வந்து விட்டார் பாரு.
பாருவிற்கு, வசந்தி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக வதந்தி என்று வைத்திருக்கலாம்.
க்யூன்ட்ஸ் என்கிற பெயரில் வியானா செய்தது முழுக்க எரிச்சலூட்டுபவையாக இருந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 53
காலையிலேயே தனது திருவிளையாடலை துவங்கினார் வியானா. நோட்டீஸ் போர்டில் தர்மலிங்கம் வாத்தியாரையும் வசந்தி மேமையும் இணைத்து, ஹார்ட் அம்புக்குறி எல்லாம் போட்டு கார்ட்டூன். இருவரும் ஒழிக என்று சாபம் வேறு.
ஸ்கூல் டாஸ்க்கில், பொருட்களை ஒளித்து வைப்பதுதான் சுவாரசியம் என்று நினைத்து விட்டார்கள் போல. சபரியும் விக்ரமும் சேர்ந்து பாருவின் சேலையை ஒளித்து வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்தார்கள். இது ஒரு விளையாட்டுதான். பாரு இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அவரே சொன்னது போல் ஏதாவது மாடர்ன் டிரஸ்ஸை போட்டுக் கொண்டிருக்கலாம்.
ஆனால் “என்ன இப்படிப் பண்றாங்க… சேலையைக் காணோம்ன்னு எப்படி நான் கேட்க முடியும்… கூச்சமா இருக்கு. இவங்களுக்கு நான் ஏன் வடிச்சுக் கொட்டணும்..” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார். ‘என் முடியை வேற கட் பண்ணிட்டாங்க’ என்கிற அனத்தல் வேறு. அது சுபிக்ஷாவின் முடி என்கிற பிராங்க் நேற்றே தெரிவிக்கப்பட்டு விட்டது. அழுது புலம்பிய பாருவிற்கு ஆபத்பாந்தவனாக வந்து ஆறுதல் சொன்னார் கம்மு.
“அவங்க ரொம்ப அழறாங்க.. கொடுத்துடுங்க” என்று ரம்யா சொல்ல, “இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ளயா?” என்று இந்த விளையாட்டை இழுக்க முயன்றார் விக்ரம். என்றாலும் பாருவிடம் எதற்கு வம்பு என்று சேலையைக் கொண்டு போய் கொடுத்து விட்டார். “இது நல்லால்ல” என்று அதன் பிறகும் அழுது ஊரைக் கூட்டினார் பாரு.