வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சொல்லுங்க மா..”
வந்துட்டு இருக்கேன்…
இப்பதான் வடசேரி…
சரி பார்த்து வா…
ம்ம் என்ற கனத்த குரலோடு பேருந்து ஜன்னல் துணியை நீக்கி பார்த்தேன்…பேருந்து ஒழுகினசேரி தாண்டி வடசேரி ஊருக்குள் நுழைந்துகொண்டு இருந்தது. செல்போனை பார்க்கட்டில் திணித்து கிளம்பத் தயாரானேன்…
நடத்துனர் அறை கதவை திறந்து “வடசேரி எல்லாம் எழுந்து வாங்க என கட்டளையிட்டார்” தூக்கம் தெளிந்த குரலாகவே இருந்தது அவரது குரல்.தனியார் தொலைதூர பேருந்தில் ஏது நடத்துனர் எல்லாரும் ஓட்டுநர்கள் தானே?
நீக்கி இருந்த திரையை மீண்டும் பார்த்தேன் வடசேரி பேருந்து நிலையம் தலையைக் காட்டியது.
எழுந்து செல்ல தயாரானேன். அங்கங்கே சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது.இரண்டு மூன்று செல்போன்களின் அலாரம் சத்தமும் அடிக்கடி சில முணுமுணுப்புகள் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது..சிலர் இன்னும் செல்ல வேண்டும் போல அவர்கள் அப்படியே இருந்தார்கள்.ஒருவருக்குப் பின் ஒருவராக இறங்கத் தயாரானோம் எல்லோர் மனதிலும் ஒருவித மகிழ்ச்சியும் மறைந்து இருந்து எட்டிப் பார்த்தது தூக்கக் கலக்கத்தில் யாருமே சரியாக பேசவில்லை எல்லோருடைய குரலும் மிகவும் அமைதியாகவும் தேய்ந்து போன குரலாகவே இருந்தது. பேருந்து நின்று ஓட்டுனர் அறைக்கதவை திறந்தார்.
அண்ணா இதுதான் நாகர்கோவிலா?…
ஆமா இது தான் உங்களுக்கு எங்க போனும்..
எனக்கு இடலாகுடி போனும்….
இங்கதான் பஸ் ஸ்டாண்ட்… தெக்கால நடந்து போனிங்கன்னா கன்னியாகுமரி பஸ் நிக்கும் அதுல ஏறிப்போங்க…
என்று யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது என் மனதிற்கு சிறிய புன்னகை என்ன செய்ய முடியும் பல காலங்கள் அந்த ஊரில் தானே நான் பள்ளியில் படித்தேன்.
பின்னாலிருந்து ஒரு பையன் காலைத் தட்டியவுடன் பின்னால் திரும்பி பார்த்தேன் ஒருவர் செய்கை மொழியில் சாரி என்று சொன்னார் நானும் அவருக்கு பதிலாக தலையைச் சேர்த்து திரும்பி விட்டேன். அந்த பேருந்து மார்த்தாண்டம் வழி செல்ல இருப்பதால் வடசேரி பேருந்து நிலையத்தில் வாசலிலே இறக்கிவிட்டு அதன் பயணத்தை தொடங்கியது. இடலாக்குடிக்கு வழி கேட்டவர் மற்றொரு முறை அவர்களைப் பார்த்து பேருந்து நிற்கும் இடத்தை உறுதி செய்து கொண்டார்.
பேருந்து நிலையம் வாசலை தாண்டி உள்ளே நடக்க ஆரம்பித்தேன். ஒருமுறை பாக்கெட்டை தொட்டு செல்போன் இருப்பதையும் பின்பக்கத்தில் பர்ஸ் இருப்பதையும் உறுதி செய்து கொண்டேன். மணி ஏழு மணி கடந்து ஓடிக் கொண்டிருந்தது.இன்று சனிக்கிழமை என்பதால் அங்கங்கே பள்ளி சீருடையில் சில மாணவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.இன்னொரு பேருந்து பிடித்து தான் ஊருக்கு செல்ல வேண்டும்.