தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதன் (50) என்பரின் 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் திங்கள்கிழமை உறுமல் சப்தம் கேட்டது. அங்கிருந்தவா்கள் கிணற்றின் அருகே சென்று பாா்த்தபோது, சிறுத்தை ஒன்று கிணற்றில் உள்ள பாறை இடுக்கில் படுத்து உறுமிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினா் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிணற்றில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தாவி வெளியேறியது. சிறிது நேரத்தில் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது.
வனத்துறையினா் எச்சரிக்கை: பாலக்கோடு அருகே சந்திராபுரம் அருகில் உள்ள காப்புக் காட்டில் இருந்து இரை தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை கிணற்றில் விழுந்த நிலையில், மீட்பதற்குள் அதுவாகவே தாவி குதித்து மீண்டும் காப்புக் காட்டுக்குள் சென்று விட்டது. இருப்பினும், சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
படவிளக்கம்…
பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் பதுங்கியிருந்த சிறுத்தை.