பொங்கல் திருநாளின் தொடர்ச்சியான மாட்டுப் பொங்கல் நாளன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர்; பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 2400 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படிக்க: தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!
பொங்கல் திருநாளன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடமும், 15 காளைகளை அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடமும், 13 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
அதுமட்டுமின்றி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் களமாடும்போது, காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்த அவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பலியானார்.