பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வழங்கப்படும்.
அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்.
இதனை நாங்கள் உறுதியுடன் செய்து வருகின்றோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.