பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 122-ம் ஆண்டு நினைவஞ்சலி | 122nd Anniversary of Palaru Big Flood Victims Memorial Day

Spread the love

பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் வழியாக 90 கி.மீ பயணிக்கும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 30 கி.மீ பயணித்து தமிழகத்தில் புல்லூர் என்ற இடத்தில் நுழைந்து அகண்ட பாலாறாக தமிழ்நாட்டில் 222 கி.மீ தொலைவுக்கு ஓடி செங்கல்பட்டு மாவட்டமவயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

பாலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கடந்த 1903ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமானது கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா அணை உடைந்ததால் அங்கிருந்து அசூரவேகத்தில் புறப்பட்ட வெள்ளமானது, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை கடந்த 1903ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி நள்ளிரவில் சூழ்ந்தது.

அப்போது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வாணியம்பாடி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மக்கள் மட்டுமின்றி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய துயர சம்பவமாக பாலாறு பெருவெள்ளம் இன்று வரை கருதப்படுகிறது. இத்துயர நிகழ்வு குறித்த செய்திகள் லண்டன், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வெளியாகும் நாளிதழ்களில் அப்போது வெளியானது.

மேலும், லண்டன் மாநகரில் இருந்த விக்டோரியா மகாராணிக்கு தந்தி மூலம் வாணியம்பாடி பெரு வெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பெருதுயர சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிக்கையும் அப்போது பதியப்பட்டது. வாணியம்பாடி பெரு வெள்ளத்தை நினைவு கூறும் வகையில், வாணியம்பாடி பாலாற்றங்கரையில் வெள்ளத்தின் அளவை குறிக்கும் வகையில் வாரச்சந்தை மைதானம் அருகே நினைவு தூண் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.12ம் தேதி பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாலாறு உரிமையாக்காக போராடியவர்களுக்கு, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பு குழு, பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வாணியம்பாடி பெரு வெள்ளத்தின் 122ம் ஆண்டையொட்டி பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடிய போராளிகள் எம்.எம்.பஷீர் அகமது, பொறியாளர் நடராஜன், விவசாய சங்கத் தலைவர் சி.கே.தனபால் மற்றும் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு மாநிலச்செயலாளர் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் உள்ளிட்டோரின் படங்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட நினைவு தூண் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக பேருந்து நிலையத்தில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி, வாணியம்பாடி நகராட்சி மன்றத் தலைவர் உமா பாய், கவுன்சிலர் சாரதி குமார், பாலாறு ஆர்வலர்கள் அம்பலூர் அசோகன், விவசாய சங்க மாவட்டச்செயலாளர் இரா.முல்லை, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் வடிவேல் சுப்பிரமணியன், ஹரிகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், சேது ராமன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *