ராமநாதபுரம்: பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்ட வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்துக்கு வருகை தந்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சமீபத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் குழந்தை இறந்துள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட நல்ல மருத்துவ கட்டமைப்பு உள்ளது.
குழந்தை இறப்பில் தவறு இருந்தால் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இருந்தபோதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. ரயில்வே அதிகாரிகள் பலமுறை ஆய்வுகள் நடத்தியும் தற்போது தான் மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் இறுதியாக திறக்கப்படவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டத்தில் ஈடுபடும்.
தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் பல லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தமிழக அரசு எந்த ஒரு நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசும் பயிர் காப்பீட்டுக்கான நிதி இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும், மாநில அரசு சொந்த நிதியில் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் மேலபிடாவூரில் பட்டியல் இன இளைஞர் புல்லட் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக சாதி வெறியர்களால் அவரது கைகள் வெட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படுவது தமிழகத்துக்கு இழுக்கு. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சாதிய வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். உரிய காலத்தில் இதுபோன்ற வழக்குகளை விசாரணை செய்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும். பள்ளிகள், கோயில்கள் முன்பு உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது.
ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளைில் ஈடுபட்டால் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். கல்வி நிலையங்களில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது, பாஜக அரசு உள்நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கப்பட்டது போல் தெரிகிறது. அதிமுக இன்னும் பல அணிகளாக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு அமைத்துள்ள குழுவை கலைத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்சினை அண்டை நாட்டு பிரச்சனை. இதனை மத்திய அரசு தான் கையில் எடுத்து இருநாட்டு பிரதிநிதிகளிடம் பேசி சுமூகமான உடன்பாடு எட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் குருவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.