பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: வேல்முருகன்  | Velmurugan talks on Law and Order

1354520.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. இருப்பினும் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் 400-க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, புதிதாக கட்சியில் இணைந்த நபர்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: இன்று கட்சியில் புதிதாக இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன் எடுத்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நீங்கள் எல்லாம் இணைந்துள்ளது என்பது கட்சிக்கு வலுசேர்க்கும். கட்சி வேகமாக வளரும்.

தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியல் வேகமாக வளர்த்து வருகிறது. தமிழ் தேசிய அமைப்புகளை விமர்சனம் செய்யாமல், மாற்று அரசியலை மேற்கொள்ள வேண்டும். நம்மை திசை திருப்ப ஒரு கூட்டம் காத்துக் கொண்டுள்ளது. 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதிமுக என்பது மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம். இது இன்று பல்வேறு குழுவாக இயங்கி வருகிறது. சிறந்த ஆளுமையாக உள்ள கட்சிகளை பாஜக கட்சி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வைத்து இணைக்க முயற்சி செய்கிறது. பிரதமர் மோடியை செங்கோட்டையன் பாராட்டுவதை வைத்து மட்டும் எதுவும் சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்ற அளவில் இல்லை. ஆனால், பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெறுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும்.

டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 கூடுதலாக வாங்குவது தங்கள் கட்சிகள் நேரடியான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ரூ.1,000 கோடியா ரூ.5000 கோடியா, ரூ.10,000 கோடியா என்பதை நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு டாஸ்மாக்கில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தவறு இழைத்தவர்கள் மீது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *