நடிகர் ஜெயசூர்யா தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, உடனே நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) பொறுப்பு வகித்த பொதுச்செயலர் பதிவியை ராஜிநாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
தொடர்ந்து, நடிகை மினு முனீர் மற்றும் இன்னொரு நடிகை நடிகர் ஜெயசூர்யா, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினர். இது, ஜெயசூர்யா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிலையில், நடிகர் ஜெயசூர்யா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்தியதற்கும் என் பக்கம் நிற்பதற்கும் நன்றி. நானும் என் குடும்பமும் கடந்த மாதத்திலிருந்து அமெரிக்காவில் இருக்கிறோம். இதற்கிடையே, என் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது எனக்கும், என் குடும்பத்துக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை, சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்தப் புகார் தொடர்பாக என் சட்ட ஆலோசகர்கள் வழக்கை தொடர்வார்கள்.
மனசாட்சி இல்லாதவர்களால் யார் மீது வேண்டுமானாலும் போலியான குற்றச்சாட்டை வைக்க முடியும். இங்கு என் பணிகள் முடிந்ததும் விரைவில் நாடு திரும்புவேன். பொய் எப்போதும் உண்மையைவிட வேகமானது. ஆனால், உண்மை வெல்லும். நான் நம் நீதியமைப்பை நம்புகிறேன். இந்த பிறந்தநாளை இவ்வளவு வலிமிக்கதாக மாற்றியவர்களுக்கு நன்றி. பாவம் செய்யாதவர்கள் கற்களை எறியட்டும், ஆனால் பாவம் செய்தவர்கள் மீது மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.