பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

dinamani2F2025 03 052F5g9em8yp2Fnewindianexpress2024 07f80ccd89 ddd8 45b8 b209 7b8f7af4d476Can Ad
Spread the love

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கமலா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகள் ராஜேஸ்வரி பாா்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி. இதனால், திருச்சியில் உள்ள பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளிக்கான அரசுப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா், விடுதிக் காப்பாளா்கள் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக என்னிடம் கூறினாா். இன்னும் சில மாதங்களில் பள்ளி படிப்பு முடிந்து விடும் எனக் கூறி, அவரை சமாதானப்படுத்தி அங்கு தங்கி படிக்க அறிவுறுத்தினேன்.

கடந்த மாா்ச் 9-ஆம் தேதி காலையில் பள்ளியிலிருந்து எனக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது. எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனா். சற்று நேரத்தில் காவல் துறையினரிடமிருந்து எனது மகள் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் எனத் தகவல் வந்தது. உடனடியாக விரைந்து சென்றோம்.

எனது மகளின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்து 5 மாதங்கள் கடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக விசாரணையை முடிக்கும் நோக்கிலேயே போலீஸாா் செயல்படுகின்றனா்.

எனது மகள் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்து பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் நீதி கிடைக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டதால் கண் துடைப்புக்காக பள்ளியின் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், விடுதிக் காப்பாளா் அனிதா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதுவரை எனது மகளின் உடல்கூறாய்வு அறிக்கையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாா். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் தினேஷ், கோகுல், அருள்ஷா்மா ஆகியோா் முன்னிலையாகி முன் வைத்த வாதம்: இந்த வழக்கில், மாணவியின் தாய் கணவரை இழந்து நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இதையறிந்து கொண்டு இவரின் மகளான பிளஸ் 2 மாணவியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்தனா். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *