சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை ராதிகா பேசியுள்ளார்.
மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர்.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாத் துறைகளிலும் இப்பிரச்னையைப் பேச வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா, “எல்லா மொழித் திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. சினிமா மட்டுமல்ல பல துறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். என் அப்பா (எம். ஆர். ராதா) காலத்திலிருந்து இதெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். சிலரது பெயரைச் சொன்னால் பயந்துவிடுவீர்கள்.
குடும்ப கஷ்டத்திற்காக நடிக்க வந்தவர்கள் சிலரின் எண்ணங்கள் பின்நாள்களில் தவறிவிடுகின்றன. சினிமாவில் என்னை பாதுகாக்க நான் தைரியமாகவே இருந்தேன். சினிமா ஆணாதிக்கம் கொண்ட துறை. எந்தக் காலத்திலும் மாறாது. 1960-களிலிருந்தே நடிகைகளின் கதவுகளைத் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். சில நடிகைகள் பாதுகாப்புக்காக என் அறையில் தங்கியிருக்கின்றனர்.
மலையாளம் மட்டுமல்ல நம் மொழியிலும் நடக்கிறது. தமிழில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கலாம். என் தரப்பிலிருந்து நடிகர் சங்கத்திற்கு நானும் அழுத்தம் கொடுப்பேன். முதலில் நடிகைகள் ஒரு விசயத்தைச் சொன்னால் நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பலருக்கும், நடிகைதானே? என்கிற இளக்காரம் இருக்கிறது. முக்கியமாக, பல யூடியூபர்களை ஒழிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் பல நடிகைகளைப் பற்றி போலியான தகவல்களையும் அந்தரங்கங்களையும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
நடிகைகளுக்கு நிகழ்ந்த இந்தப் பாலியல் தொல்லைகள் குறித்து நம்மூர் முன்னணி நடிகர்களும் பேசவில்லை. நேரில் பார்த்தால் கேட்க வேண்டும். இனி இந்தப் பிரச்னை நிகழக்கூடாது என்றால் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இதைப் பற்றி பேச வேண்டும். இவர்கள் நடிகைகளிடம் மனம் திறந்த பேசுவதில்லை. பாலியல் தொல்லை நிகழ்ந்தால் தைரியமாக சொல்ல வேண்டுமென எந்த நட்சத்திர நடிகரும் நம்பிக்கையை அளிப்பதில்லை.” எனக் கூறியுள்ளார்.