பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலி: அண்ணா பல்கலை.யில் புதிய கட்டுப்பாடுகள் | Sexual assault incident: New restrictions at Anna University

1344712.jpg
Spread the love

சென்னை: மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளிநபர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. ஒருசில பகுதிகளில் அடர் மரங்கள் நிறைந்துள்ளன. பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, எந்தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை, போலீஸார் 2 ட்ரோன்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் கே.எஸ்.ஈஸ்வரகுமார், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி டீன் எஸ்.மீனாட்சி சுந்தரம், கட்டிக்கலை கல்லூரி டீன் கே.ஆர்.சீதாலட்சுமி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

யாரேனும் அடையாள அட்டையை தொலைத்திருந்தால் உடனடியாக மாற்று அடையாள அட்டை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளும் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *