பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

Spread the love

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் மங்கூட்டத்திலுக்கு எதிராக இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இளம் பெண்ணுடன் ராகுல் மாங்கூட்டத்தில் வாட்ஸ் அப் சாட் செய்தது போன்றவை சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. ராகுல் மாங்கூட்டத்தில் மீது ஏற்கனவே 2 பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  முன்ஜாமீன் பெற்று போலீஸ் கஸ்டடியில் சிக்காமல் தப்பினார். அவரது கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவதாக ராகுல் மாங்கூட்டத்தால் பாதிக்கப்பட்ட கோட்டயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடா நாட்டில் இருந்தபடி இ-மெயில் மூலம் கேரள மாநில போலீஸுக்கு புகார் ஒன்றை அனுப்பினார். திருமணம் ஆன 31 வயது இளம்பெண்ணை திருவல்லாவில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இம்மாதம் 5-ம் தேதி இ மெயில் மூலம் அந்த பெண் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் ராகுல் மாங்கூட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவேலிக்கட சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மாங்கூட்டத்தில்

போலீஸரின் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

ராகுல் மாங்கூட்டத்தில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த இளம்பெண்ணை சந்தித்து நட்பாகி உள்ளார். குடும்ப பிரச்னை சம்பந்தமாக ஆதரவாக பேசியுள்ளார். பின்னர் வாட்ஸ் அப்பில் தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். நேரில் சந்தித்து பேசுவதற்கு தனியிடம் வேண்டாமா எனக்கூறி ஓட்டலில் சந்திக்கலாம் என ராகுல் மாங்கூட்டத்தில் தெரிவித்தார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திருவல்லாவில் உள்ள ஓட்டலில் அந்த பெண்ணை வரவழைத்தார். அன்று மதியம் முதலில் ஓட்டலுக்குச் சென்ற இளம் பெண் மூலம் ரூம் புக்செய்யவைத்தார். அதன் பிறகு 15 நிமிடங்களுக்குப்பின் அந்த இளம் பெண் இருந்த அறைக்குச் சென்றார். இளம்பெண்ணை பார்த்ததும் அவரை கட்டிலில் தள்ளிவிட்டு முகத்தில் தாக்கினார். இளம்பெண் அவரை தள்ளிவிட்டுத் தப்பிக்க முயன்றார். ஆனால், பலவந்தமாக இளம்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். கடைசியாக அந்த இளம் பெண்ணின் முகத்தில் துப்பிவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்.

இவ்வாறு ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ

இளம் பெண் தனக்கு நடந்த துயரம் குறித்து பேசிய ஆடியோ முதல்வர் பினராயி விஜயன் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்தே துரித நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவில் வசித்துவந்த அந்த இளம்பெண் விரைந்து கேரளாவுக்கு வர உள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் அணிந்திருந்த ஆடைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக இளம்பெண் தெரிவித்துள்ளார். அதில் ராகுல் மாங்கூட்டத்திலின் சில சாம்பிள்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ராகுல் மாங்கூட்டத்திலின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரத்த மாதிரி டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர். டி.என்.ஏ பரிசோதனையில் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிரான முடிவு வந்தால் வழக்கு இன்னும் பலமாகும் என கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *