திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளிகளில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் சமூக ஆர்வலரும், புகைப்பட கலைஞருமான பாப்புராஜ் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை திரட்டி வழங்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாக பாப்புராஜ் செய்து வருகிறார். அந்தவகையில் குஜராத் நிலநடுக்கம், கார்கில் போர், சுனாமி, இலங்கை தமிழர் மறுவாழ்வு, காஷ்மீர் வெள்ளம், கஜா புயல், கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்பு என்று பல்வேறு இயற்கை பேரிடர்களின்போது நிதி திரட்டி கொடுத்துள்ளார்.
இதற்காக தேனீர் வியாபாரம் செய்வது, தொலைபேசிகளை சுத்தம் செய்து கொடுப்பது, பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களை சுத்தம் செய்து கொடுப்பது என்றெல்லாம் வித்தியாசமான முறையில் பணிகளை செய்து பொதுமக்கள் கொடுக்கும் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போதைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
பாளையங்கோட்டை சிஎஸ்ஐ மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்களின் காலணிகளை பாப்புராஜ் சுத்தம் செய்து கொடுத்து நிதி திரட்டினார். ஒரு நாளைக்கு 2மணிநேரம் என்று 7 நாட்கள் 14 மணி நேரம் இவ்வாறு பணி செய்து கிடைக்கும் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.