பாஸ்போர்ட் புதுப்பிப்பு கோரி பழ.நெடுமாறன் வழக்கு: பரிசீலிக்க அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு | Pazha Nedumaran case seeking passport renewal: HC orders to consider

1347193.jpg
Spread the love

சென்னை: தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி பழ. நெடுமாறன் தொடர்ந்த வழக்கில், அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தாக்கல் செய்திருந்த மனுவில், “காலாவதியாகிவிட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி கடந்த 2022-ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எனது விண்ணப்பித்தை நிராகரித்து விட்டார். எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ். சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, “முன்னாள் எம்எல்ஏ-வான மனுதாரருக்கு எதிராக காவல்துறை அளித்த அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் புதுப்பித்து தரப்படவில்லை என காரணம் கூறப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை எங்களுக்குத் தர பாஸ்போர்ட் அதிகாரிகள் மறுத்து விட்டனர். குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க மறுக்க முடியாது,” என வாதிட்டார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேசன், “தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் இருக்குமாறு பழ.நெடுமாறன் பேசியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல். இது இலங்கை உடனான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

போலீஸார் கொடுக்கும் தடையில்லா சான்றின் அடிப்படையிலேயே பாஸ்போர்ட் வழங்கவோ, புதுப்பித்துக் கொடுக்கவோ முடியும். மனுதாரரின் வெளிநாட்டு பயணத்தால் நமது நாட்டுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு தீங்கு ஏற்படும் என பாஸ்போர்ட் அதிகாரி கருதினாலும், சம்பந்தப்பட்ட நபரது விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது,” என்றார்.

மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் வெளிநாடு செல்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணம் ஏற்கும்படியாக இல்லை. எனவே மனுதாரரின் விண்ணப்பித்தை நிராகரித்து பாஸ்போர்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரு வாரங்களில் இதுதொடர்பாக மனுதாரர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்.

அவரது விளக்கம் பெற்ற மூன்று வாரங்களில் பழ. நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும், என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *