கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கமான வள்ளுவமுனை அமைந்துள்ள குமரி முனைக்கு வந்துள்ளேன். உணவு, வட்டார வழக்கு, கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். எல்லை போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, என்.எஸ்.கிருஷ்ணன், தோழர் ஜீவா, தேசிய விநாயகம் பிள்ளை என பல பேருவமைகளை கொண்டுள்ள தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
குமரிக்கு இதெல்லாம் செய்துள்ளோம்!
இஸ்ரோவுக்கு எத்தனையோ தலைவர்களை கொடுத்த மாவட்டம். இங்கு மிகசிறப்பாக விழாவை ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். பால்வளத்துறையை சிறப்பாக கவனித்துவரும் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர் அவர். 3,12,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக அவரது செயல்பாடு அமைந்துள்ளது. அவருக்கு துணையாக நிற்கும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நேற்று இலங்கை தமிழர்கள் குடியிருப்பு, திருவள்ளுவர் வெள்ளிவிழா வளைவு, தியாகி பொன்னப்பநாடார் சிலை ஆகியவற்றை திறந்துவத்தேன். எல்லைப்போராட்ட வீரர் மார்ஷல் நேசமணியின் போர்ப்படை தளபதியாக இருந்தவர் பொன்னப்பநாடார். எளிமையாக இருந்து ஏழைகளுக்காக செயல்பட்டவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் அவரது வெண்கலச்சிலை திறந்துவைத்ததில் பெருமைப்படுகிறேன். கலைஞரின் சிலை, எனது பெயரில் படைப்பகம் ஆகியவற்றை நாகர்கோவில் முதல் மேயர் மகேசின் சிறப்பான ஏற்பாட்டில் திறந்துவைத்தேன்.
2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரி மாவட்டம் வந்தேன். பேரறிவுச்சிலை வெள்ளிவிழாவை கொண்டாடினோம். கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தேன். 2026-ல் திராவிடமாடல் 2.0 அமைவதற்கு முன் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிலம் கையகப்படுத்தி வீடு கட்டிக்கொடுத்தாலும் அரசு நிலம் என இருந்தது. அவர்களுக்கு இன்று பட்டா வழங்கப்படுகிறது. 40,086 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். தூண்டில் வளைவுகள், மீன் இறங்குத்தளங்கள், வலைபின்னும் கூடங்கள், மீன் ஏலக்கூடங்களை குமரி மீனவர்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். இதன்மூலம் 1,47,360 மீனவர்கள் பலனடைந்துள்ளனர். குளச்சல் மீன்பிடித்துறைமுக விரிவாக்கம்,
வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாயில் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். குளச்சலுக்கும் வாணியக்குடிக்கும் 3 கி.மீ தொலைவுதான் இடைவெளி. மீனவ பெருங்குடி மக்கள் கேட்டதால் துறைமுகத்தை செய்துகொடுத்துள்ளோம். மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணாம் 5000 ரூபாயில் இருந்து 8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோட்டாறு சவேரியார் ஆலயத்தை சீரமைக்க 2.29 கோடி, நாகர்கோவில் மாநகராட்சியில் குடிரநீர் இணைப்பு. சுசீந்திரம், தேரூர் குளங்கள் ராம்சார் குறியீடு, இலங்கை தமிழர்களுக்கு 762 வீடுகள், தோவாளை மலர் சந்தையில் உயர்மட்ட கூடம்,
அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 9 புதிய கட்டடங்கள் மற்றும் ஸ்கேன் மிஷின். பத்மநாபபுரம் மருத்துவமனையில் மத்திய ஆய்வகம்,
சுற்றுலாத்துறைக்காக சிற்றார் 2 அணை, திற்பரப்பு அருவி மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சிப்பணிகள், வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்காக அடிக்கல், நியூ டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குமரியின் எல்லா பகுதிகளுக்கும் வளர்ச்சிப்பணிகளை கொண்டுவந்துள்ளோம்.