பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு சரியே: ஐகோர்ட் | Compulsory retirement for professor who sexually harassed student is correct says high court

1342392.jpg
Spread the love

மதுரை: “மதுரையில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கியதில் தவறில்லை” என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக பிஎச்டி மாணவி ஒருவர் தனக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்து வரும் பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை விசாரிக்க பல்கலைக்கழக உள் புகார் விசாரணை குழுவுக்கு (ஐ.சி.சி.,) பதிவாளர் பரிந்துரைத்தார். ஐசிசி விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி பேராசிரியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, பிஎச்டி மாணவி கடைசி பாலியல் துன்புறுத்தல் நடைபெற்ற நாளிலிருந்து 3 மாதத்துக்கு பிறகு புகார் அளித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து பிஎச்டி மாணவியும், பல்கலைக்கழக பதிவாளரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்து நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: “கல்வி நிறுவனங்களில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் அதிகளவில் நடைபெறுகின்றன. பெண்கள் அளிக்கும் புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படாதது மற்றும் பழிவாங்கப்படும் அச்சம் காரணமாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க மாணவர்கள் தயங்குகின்றனர். எந்த பல்கலைக்கழகத்திலும் பாலியல் துன்புறுத்தல்களும் நடைபெறாத நிலை உருவாக வேண்டும்.

இந்த வழக்கில் தனி நீதிபதி முழுப் பிரச்சினையையும் புரிந்துகொள்ள தவறிவிட்டார். குற்றம் நடந்திருப்பதற்கான சிறிதளவு அறிகுறி, பாலியல், மனரீதியாக, உணர்வுரீதியான துன்புறுத்தல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தல் ஆழமான உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்ததில் தவறில்லை.

சம்பந்தப்பட்ட பேராசிரியர் விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறில்லை. இதனால் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு சம்பந்தப்பட்ட பேராசிரியர் 4 வாரத்தில் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். தவறினால் பேராசிரியரிடம் இருந்து பணத்தை வசூலிக்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காலம்” நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *