பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! – பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

Dinamani2f2024 12 272f62ffp1ov2fasim Arun.png
Spread the love

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிநவீன பிஎம்டபிள்யூ உள்பட உயர் பாதுகாப்பு வாகனங்கள் பல இருந்தபோதிலும், மன்மோகன் சிங், எளிமையான அதேநேரத்தில் தனது விருப்பமான மாருதி காரைப் பயன்படுத்தவே அதிகம் விரும்பியதாகக் கூறுகிறார்.

“அசிம், இந்த காரில் (பிஎம்டபிள்யூ) பயணம் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய கார் மாருதி. அதில் பயணம் செய்யவே விரும்புகிறேன்” என்று மன்மோகன் சிங் தன்னிடம் அடிக்கடி சொன்னதாகக் கூறுகிறார்.

இதையும் படிக்க | அமைதியான பிரதமரா? – மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

அசிம் அருண் 1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

‘2004 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலராக இருந்தேன். சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் தலைவர் என்ற முறையில் பிரதமருடன் எப்போதும் அவரது நிழலைப்போல இருக்க வேண்டியது பொறுப்பு. ஒரே ஒரு பாதுகாவலர் மட்டுமே அவருடன் இருக்க முடியும் என்றால், அது நானாகத்தான் இருப்பேன்.

அவர் பிஎம்டபிள்யூ காரில் செல்ல விருப்பமில்லை என்று அடிக்கடி கூறுவார். அப்போது, இது ஆடம்பர கார் மட்டுமல்ல, இது பாதுகாப்பு வசதிகள் நிறைந்தது என்று நான் கூறுவேன். எனினும் பிஎம்டபிள்யூ காரில் செல்லும்போது மாருதி கார் வந்தால் அதைத்தான் பார்ப்பார்.

சாமானியர்களின் மீது அக்கறை கொண்ட ஒரு நடுத்தர வர்க்கத்தவர் என்பதை உறுதிப்படுத்துவதுபோல அவர் அதை ஏக்கத்துடன் பார்ப்பார்” என்று கூறுகிறார்.

மன்மோகன் சிங்

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 -ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13-ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தாா். 1991-ஆம் ஆண்டுமுதல் மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த அவா் நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாா்.

நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் ஒருவராக அறியப்படும் மன்மோகன் சிங் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1932, செப்டம்பா் 26-ஆம் தேதி பிறந்தாா். 1948-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயா்நிலைக் கல்வியை நிறைவு செய்த அவா் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்தாா்.

1971-ஆம் ஆண்டு மத்திய வா்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், 1972-இல் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவா் நியமிக்கப்பட்டாா். பின்னா் நிதி அமைச்சக செயலா் உள்பட அரசின் பல்வேறு உயா்பதவிகளை வகித்தாா்.

1980 முதல் 1982 வரை தேசிய திட்டக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்தாா். 1982 முதல் 1985 வரை ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் பதவி வகித்தபோது வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். இந்திய ரிசா்வ் வங்கி சட்டத்தில் புதிய அத்தியாயத்தை அவா் அறிமுகப்படுத்தியதோடு நகா்ப்புற வங்கி துறையையும் அவா் உருவாக்கினாா்.

1985 முதல் 1987 வரை திட்டக்குழுவின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தாா். 1987 முதல் 1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் செயலராக இருந்தாா்.

1991-ஆம் ஆண்டு பிரதமா் நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக அவா் பதவியேற்றபோது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அப்போது நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்தது.

1998 முதல் 2004 வரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அவா் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதையடுத்து பிரதமராக அறிவிக்கப்பட்டாா்.

2009-இல் அந்தக் கூட்டணி மீண்டும் வென்றதையடுத்து, இரண்டாவது முறையாக அவா் பிரதமரானாா். அவருடைய முதல் பதவி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலை திட்டம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டாவது பதவி காலத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *