“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம்” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai Alleges Tamil Nadu Government’s Indifference in Connecting Farmers to PM’s Kisan Fund Scheme

1275428.jpg
Spread the love

சென்னை: பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தில், விடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நலனுக்காக, சொந்த நிலங்களில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, வருடம் ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் விவசாயிகள் கவுரவ நிதி (PM Kisan) திட்டத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும், 17 தவணைகளாக, ரூ.34,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,435 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2015 – 16ம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளதாகவும், இவர்களில், சுமார் 39 லட்சம் விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறத் தகுதியுடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உண்மையான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்காமல், சுமார் 7 லட்சம் போலியான நபர்களை இந்தத் திட்டத்தில் இணைத்து, பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் கண்டறியப்பட்டு, அவர்களின் பெயர்கள் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. ஆனால், தகுதியுடைய உண்மையான விவசாயிகளை இணைக்கும் பணி நடைபெறவில்லை.

கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் சுமார் 44 லட்சம் பேர் பலனடைந்த இந்தத் திட்டத்தில், பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். சுமார் 23 லட்சம் பயனாளிகள், திமுக அரசால் விவசாயிகள் உதவித் தொகை பெறுவதிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். 23 லட்சம் பேரும் விவசாயிகள் இல்லையென்றால், இந்த மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன? சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, 2015 – 16ம் ஆண்டு விவசாயிகள் கணக்கெடுப்பின்படி, சுமார் 39 லட்சம் விவசாயிகள், மத்திய அரசின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள். ஆனால், வெறும் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது பயனடைகிறார்கள் என்றால், தமிழகத்தில் இருந்து, தகுதியான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்க, திமுக அரசு மெத்தனமாக இருக்கிறது என்றுதான் பொருள்.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்திற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில், உரிய விபரங்களை தமிழக வேளாண்துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழக வேளாண்துறையினர் மெத்தனமாக உள்ளதால், பல லட்சம் தகுதியுள்ள விவசாயிகள், மத்திய அரசின் விவசாய உதவித் தொகையைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட 23 லட்சம் பேரும் உண்மையில் விவசாயிகள் இல்லையா அல்லது மத்திய அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக, திமுக அரசு செய்யும் கீழ்த்தரமான வேலையா என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்த நிதி, விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், திமுக தனது ஸ்டிக்கர் ஒட்ட வழியில்லாமல், தகுதியுள்ள விவசாயிகளை, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து இணைக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, மத்திய அரசு விவசாய கௌரவ நிதி பெறத் தகுதியான அனைத்து விவசாயிகளையும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், திமுக அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *