சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையில் பிஎல்ஓ பணியை மேற்கொள்ள உரிய நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தொடக்கத்தில் படிவங்களை சேகரிக்கும் பணி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் செயலியில் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரின் (பிஎல்ஓ) பணி என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பணிக்குத் தேவையான பயிற்சி மற்றும் செயலி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள பாகங்களுக்கான படிவங்களை 3 நாட்களில் பூர்த்தி செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, படிவங்களைப் பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் பெண்கள். இருப்பினும், பணியை முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதால், பிஎல்ஓ பணியை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 10 மணிக்கு திரும்பும் வாக்காளர்களின் வீடுகளில், காத்திருந்து படிவத்தைக் கொடுக்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு மாற்றாக, விடுபட்ட வாக்காளர்களுக்கென சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.
மேலும் ஒரு சில இடங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் செல்லும் சூழலில் அங்கன்வாடி ஊழியர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மாற்றுத் திறனாளி அங்கன்வாடி ஊழியர்களை இப்பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.