பிகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்துள்ளது.
சிவான் மாவட்டத்தின், தியோரியா தொகுதியில் சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலமானது பல கிராமங்களை இணைத்து வருகின்றது. இந்த நிலையில் இன்று காலையில் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பாலம் இடிந்ததில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பிகாரில் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 15 நாள்களில் இது ஏழாவது சம்பவமாகும்.
பாலம் இடிந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துணை வளர்ச்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார். தொகுதியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை அடைந்து ஆய்வ செய்தனர்.
பிகாரில் பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த ஞாயிறன்று பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் தாக்கூர்கஞ்ச் பிளாக்கில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்களில் இது ஆறாவதாகும்.
இதற்கு முன்னதாக பிகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் கிளை நதியில் பழமையான ஒரு பாலம் இடிந்து விழுந்தது.