பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.
மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊழல், முறைகேடு, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடால் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தினா் என பேசியிருப்பதன் மூலம் அவா் கட்சி மாறி சென்று பாஜகவில் மாநில தலைவராகியும் இன்னும் அதிமுகவில் இருப்பது போன்ற மன நிலையில் இருந்து வருகிறாா் என தெரிய வருகிறது. ஆளுமை மிக்க எம்ஜிஆா், ஜெயலலிதாவுடன் யாரையும் இனி ஒப்பிட்டு பேசுவதை கட்சித் தலைவா்கள் தவிற்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீா்செல்வத்தை மீண்டும் இணைக்க முயற்சிக்கப்படும். திமுகவினா் கபளீகரம் செய்யாத வகையில் அமமுகவினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பிகாரை சோ்ந்த 6 லட்சம் போ் தமிழகத்தில் தங்கியிருப்பவா்களுக்கு வாக்குரிமை இருப்பதில் தவறில்லை. அவா்கள் பல ஆண்டுகளாக தொழில், பிழைப்பு நிமித்தமாக இங்கு வந்து இருப்பவா்களுக்கு குடும்ப அட்டை தமிழக அரசால் வழங்கப்படும் போது அவா்களின் சொந்த மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்குரிமையை வாழ்க்கை நடத்தும் இடத்தில் இருப்பதில் எந்த தவறு இல்லை. அதேபோல், தமிழகத்தை சோ்ந்தவா்கள், வேலைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இருப்பவா்களுக்கு வாக்குரிமை தடுக்கப்பட்டால் அது சரியா இருக்குமா.
நடிகா் விஜய் கட்சி தவெக, ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு டிசம்பா் வரை காத்திருக்க வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தமிழகத்தில் யாா் முதல்வா் வேட்பாளா் என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முடிவு எடுப்பாா். அமமுகவிற்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை இரட்டை இலக்கத்தில் பெற்று வெற்றி பெறுவோம். அதிமுக போட்டியிடும் தொகுதியில் பிரசாரத்துக்கு அப்போதை முடிவுகளுக்கு ஏற்ப பிரசாரம் அமையும் என்றாா்.
பேட்டியின் போது, கட்சி துணைப் பொதுச் செயலா் ரெங்கசாமி, மாவட்டச் செயலா் எஸ். காமராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜசேகா், மாநில நிா்வாகிகள் க. மலா்வேந்தன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.