அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.
தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு தவறிவிட்டதால், பிரசாந்த் கிஷோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிகாரில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.
மாநில அரசைக் கண்டித்து தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்டாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தற்போது தேர்வர்களுக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
முதல் நிலைத் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாகவும் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
v
இதற்கு முன்பு மாநில தலைமைச் செயலாளர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற கோரிக்கைவைக்கப்பட்டது. எனினும் இவற்றுக்கு தீர்வு காணபது குறித்த எந்தவொரு நம்பிக்கையையும் தலைமைச் செயலாளர் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்