பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனைக்கு தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை!
24 பேர் பலி
சிவன் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 பேர் இதுவரை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில், சரண் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 4 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் உடல், பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.