பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு தவாக வலியுறுத்தல் | Tamil Nadu government should ban Bigg Boss show urges velmurugan

1379447
Spread the love

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் பண்பாடு என்பது நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த செல்வத்தை பொழுதுபோக்கு என்ற பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி.

தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து சீரழிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. தமிழர் குடும்பம் என்பது அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய விழுமியங்களுடன் வாழும் ஓர் உன்னதமான அமைப்பு.

ஆனால், இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது. இது குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் எதிரான தீவிரமான பண்பாட்டு அச்சுறுத்தல் ஆகும். தமிழ் இனத்தின் தொன்மையை மறக்கடிக்கும் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், விதிமீறல்கள், மற்றும் சமூக எதிர்ப்புகளை எழுப்பியுள்ளது. இது ஒரு வணிக நோயாக மாறி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுக்கத்தை குலைக்கிறது. எதிர்காலத் தலைமுறைக்கு அறிவை வளர்க்க வேண்டிய நேரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவரின் மனநிலையையும் மாசுபடுத்துகிறது. வன்முறை, ஆபாசம், வஞ்சகம் ஆகியவற்றை இயல்பாக்கி, சமூகத்திற்கு கேடான வார்த்தைகளை பயன்படுத்தி, அதை ஒரு பொழுதுபோக்காகக் காட்டுகிறது.

இது கல்விக்கும், சமூக சேவைக்கும், ஆரோக்கியமான உளவியலுக்கும் எதிரான ஒரு ஊடக உளவியல் தாக்குதல். இந்த நிகழ்ச்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் பண வணிக நலனுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று. பொழுதுபோக்கு என்ற பெயரில் நடக்கும் இந்த வணிக ஏமாற்றத்தை, மக்கள் விழித்துணர்ந்து நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு தமிழ் மரபையும், எதிர்காலச் சந்ததியையும் காக்கும் கடமையின் அடிப்படையில் உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *