இதில் வினோத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சாியமில்லை. சபரிக்கும் சில வாக்குகள் கிடைத்தன. அரோவின் பெயரையும் சொன்னார்கள். விக்ரமின் பெயரைச் சொன்னார் சுபிக்ஷா.
கடைசியில் எழுந்த வந்த வினோத் “வாட்டர் மெலன் இல்லாட்டி இந்த காமெடி நிகழ்ந்திருக்காது. அவர்தான் என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்’ என்று சொன்னது நன்று. ஆனால் திவாகரோ “நான் ஹீரோ மெட்டீரியல்ப்பா.. காமெடியன்ல சேர்க்காதீங்க” என்று வழக்கம் போல் அலப்பறை செய்தார். ‘ஒண்ணுமில்லை. இதுவே காமெடிதான்” என்று வீட்டை கலகலக்க வைத்தார் வினோத்.
‘நான்தான் வீட்டின் முதல் போட்டியாளர்’ என்று திவாகர் அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம். இதைப் பற்றி அரோ அடித்த கமெண்ட் “ஆமாம்.. புது வீடு கட்டும் போது முதல்ல மாட்டைத்தான் உள்ளே விடுவாங்க”.. (செமல்ல?!) பிக் பாஸ் தரும் கவுண்ட்டர்களும் நகைச்சுவை நிரம்பியவை என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்ராஜ்.
“ஒன்பது வருஷமா நடக்கற சீசன்ல நான் முதன்முறையா சிரிச்சது வினோத் அடிச்ச கமெண்ட்டிற்குத்தான்” என்று பிக் பாஸ் சொன்னது சிறப்பு. (தாய்லாந்து).
இரட்டையர் காமெடியர்களில் ஒருவர் கீழிறிங்குவது அவசியம்
“காமெடிக்கு acceptance முக்கியம்” என்று திவாகருக்கு சபரி சொன்னது சிறப்பு. திவாகரையும் வினோத்தையும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஜோடிக்கு இணையாக சொல்கிறார்கள். ஒருவகையில்தான் அது சரியாக வரும்.
எந்தவொரு இரட்டையர் காமெடியாக இருந்தாலும் ஒருவர் மேலே நிற்க, இன்னொருவர் அதற்கு அடிபணிந்தால்தான் அந்த நகைச்சுவை பலனளிக்கும். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கியதால்தான் அந்த நகைச்சுவை புகழ்பெற்றது. (எட்டி உதைப்பதெல்லாம் நகைச்சுவையா என்கிற கேள்வி வேறு டிபார்ட்மெண்ட்!).