‘ஜானி..ஜானி.. எஸ்.. பாப்பா..’ என்று பாட்டு டாஸ்க்கில் விளையாடுபவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக பாடியதை, தன்னுடைய குழந்தைகளை கிண்டலடிப்பதற்காக பாடியது என்று எப்படி ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை யோசித்தும் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சான்ட்ரா இந்தக் குரூரமான விளையாட்டை மிக அநாயசமாக செய்தார்.
“நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. நான் அப்படிச் சொல்வேனோ.. அத்தனை கேலவமானவளா.. ஒருத்தரை பிடிக்கலைன்னா.. இப்படியா சொல்வாங்க. சான்ட்ரா.. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கனி ஆணித்தரமாகவும் தார்மீகமான கோபத்துடனும் கேட்கும் போது ரோபோ போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?’ என்கிற காமெடியை சீரியஸாக செய்து கொண்டிருந்தார் சான்ட்ரா.
“அப்படி என்ன பாட்டு நான் தப்பா பாடினேன்.. சொல்லுங்க?”
“அது தெரியாது.. ஆனா தப்பா பாடினீங்க.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு. மன்னிப்பு கேட்க முடியாது”
இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. “யார் கொடுக்கற இடம் இது. எங்கே சொல்லணுமோ.. அங்க சொல்லி மன்னிப்பு கேக்க வெக்கறேன்” என்று சபதம் ஏற்று விட்டுச் சென்றார் கனி. ‘பார்க்கலாம்’ என்று இறுக்கமான முகத்துடன் அடம்பிடித்து அமர்ந்திருந்தார் சான்ட்ரா.
ஆக, இந்த வார விசாரணையில் இதுவொரு முக்கியமான புகாராக இருக்கும். விசே என்ன செய்யப் போகிறார்?
பொழுது விடிந்தது. சான்ட்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் பாரு. கம்முதான் இவரை காதல் வலையில் விழ வைத்து விட்டாராம். அம்மா வருவதால் இப்படி சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறாரோ?