முதல் சீசனில் கூட கார் டாஸ்க் நடந்தது. இந்த சீசனில் நடந்த அளவிற்கு கொடுமை அதில் இல்லை.
கார் டாஸ்க்கில் பாருவும் கம்ருதீனும் இணைந்து கொண்டு சான்ட்ராவை டார்கெட் செய்து bullying செய்ததும், தகாத வார்த்தைகளை கம்ருதீன் இறைத்ததும் அதன் உச்சமாக சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டதும் கொடூரமானது. இப்படித்தான் மற்ற சீசன்களில் விளையாடுவார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.
பாருவிற்கும் கம்முவிற்கும் ரெட்கார்ட் தரப்பட வேண்டும் என்பது பெரும்பாலோனோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது நடக்குமா?
இளமை இதோ இதோ என்கிற சாகாவரம் பெற்ற பாடலோடு புத்தாண்டு விடிந்தது. கில்லர் காயின் டாஸ்க்கில் நடந்த மாஸ்டர் பிளானைப் பற்றிய பேச்சு ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்தது. விக்ரம் இதன் மூளையாக இருந்து டாஸ்க்கை சொதப்பினாரா?
‘வினோத்தை துரத்தி விக்ரம் ஓடியது காமெடியாக இருந்தது’ என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கம்மு. “பணப்பெட்டியை தூக்கிடலாம்ன்னு பார்க்கறேன்” என்கிற ஐடியாவில் இருக்கிற பாரு, “இந்த வாரம் தாங்குவேனா” என்கிற சந்தேகத்தையும் கூடவே எழுப்பிக் கொள்கிறார்.
ஒருவருடன் நட்பில் இருக்கும் போது இனிமையான முகத்தைக் காட்டுவதும், அதில் சிறிது விரிசல் ஏற்பட்டால் கூட புறணி பேசுவதும் மோசமான குணாதிசயம். இதில் பாரு, கம்மு, சான்ட்ரா ஆகியோர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
சில நாட்கள் பாருவோடு நட்பாக இருந்த சான்ட்ரா, இப்போது பாருவைப் பற்றி விக்ரமிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார். “பிரஜினை பாரு சைட் அடிச்சிட்டே இருந்தா. என் கிட்டயே சொன்னா. செருப்பால அடிப்பேன்னு சொன்னேன்’ என்கிற வில்லங்கமான புறணியாக அது இருந்தது.