பிக் பாஸ் நிகழ்ச்சியில் உடல்நிலை மோசமடைந்து சோர்வாக இருந்த ரவீந்திரனுக்கு ரஞ்சித்தும் அருண் பிரசாத்தும் உதவியது இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8-ல் இரண்டாவது நாளான இன்று (அக்.8) ஆண்கள் அணியில் இருந்து ஒரு ஆணும் பெண்கள் அணியில் இருந்து ஒரு பெண்ணும் அணி மாறிச் செல்ல வேண்டும் என விதிக்கப்பட்டது.
அதன்படி ஆண்கள் அணியில் உள்ள அனைவரும் முத்துக்குமாரை பெண்கள் அணிக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதேபோன்று பெண்கள் அணியில் பலகட்ட விவாதத்துக்குப் பிறகு பவித்ரா ஜனனி ஆண்கள் அணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதற்குள்ளாகவே இரண்டாம் நாளின் மாலை நேரம் ஆகிவிட்டது. பின்னர் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ள பிக் பாஸ் அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை போட்டியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
உப்புக் கொடுப்பதில் பெண்கள் அணியினர் சூழ்ச்சி செய்தனர். உப்பு கொடுக்க மறுத்து தற்காலிக தர்னாவிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகர்கள்!
இதனிடையே முதல் நாளில் கேப்டன் தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. ஒருபுறத்தில் இருந்து மறுபுறமுள்ள நாற்காலியில் ஓடிச் சென்று அமர வேண்டும். இதனை இருபுறங்களும் மாறி மாறி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையில் ஒரு நாற்காலி குறைக்கப்படும். போட்டியில் அமர வாய்ப்பில்லாதவர் ஆட்டத்திலிருந்து வெளியேறுவார். கடைசிவரை நாற்காலியில் இருப்பவர் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்தவகையில் இந்த வாரத்தின் முதல் கேப்டனாக ஆனார் தர்ஷிகா.
உடல் சோர்வடைந்த ரவீந்திரன்
இந்தப் போட்டியில் ஓடியதால் உடல்சோர்வடைந்து பாதிக்கப்பட்டார் ரவீந்திரன். இரவில் பேசுவதற்கே சிரமப்பட்டதால், அவரை மருத்துவ அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரைத் தாங்கியவாறு ரஞ்சித்தும் அருண் பிரசாத்தும் அழைத்துவந்தனர்.
இந்தக் காட்சி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கடினமான சூழல்கள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால் அந்த சமயத்தில் நம்முடன் யார் இருக்கிறார்கள் என்பதே வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக்குகிறது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.