பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள ஜாக்குலின் விஜய் சேதுபதியிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
வார இறுதி நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களிடம் உரையாடும் விஜய் சேதுபதி, அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு கூப்பிடுவார். அவ்வாறு இந்த வாரம் ஜாக்குலின் பெயரை அழைக்கும்போது விஜய் சேதுபதி மேடைக்கு அருகே இருந்த ரசிகர்கள் பலர் ஆரவாரம் எழுப்பினர்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜாக்குலின் உள்பட சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
சோகத்தில் ஜாக்குலின்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 76வது நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார். இந்த வாரத்தின் கேப்டனாக விஷால் செயல்பட்டு வந்தார். அவரின் செயல்பாடுகள் உள்பட, வீட்டில் நடந்த பல சம்பவங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
அந்தவகையில் இந்த வாரத்தில் ஜாக்குலினுக்கு சிவப்பு கம்பளம் கொடுக்கப்பட்டது. அதாவது பிக் பாஸ் வீட்டில் எங்கு சென்றாலும் ஜாக்குலின் சிவப்பு கம்பளத்தில்தான் செல்ல வேண்டும். அவர் யாரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபட வைக்கலாம். அவர் எந்த வேலையையும் செய்ய வேண்டியத் தேவையில்லை.
பிக் பாஸ் வீட்டில் தனக்கு மட்டும் சிவப்பு கம்பளம் கொடுக்கப்பட்டதால், ஜாக்குலின் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார். தான் தவறு செய்துவிட்டதாலோ தவறாக வெளியே தெரிவதாலோ பிக் பாஸ் இவ்வாறு கொடுத்துள்ளதாக வருந்தினார்.
இது குறித்து பேசுவதற்காக விஜய் சேதுபதி ஜாக்குலினை அழைத்தார். அப்போது ரசிகர்கள் பலர் ஆரவாரம் எழுப்பி அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர். சிறிது நேரத்துக்கு அந்த கூச்சல் நீடித்ததால், பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜாக்குலினுக்கு பாராட்டு
பின்னர் பேசிய விஜய் சேதுபதி, சிவப்பு கம்பளம் உங்களுக்கு மட்டும்தானே கொடுக்கப்பட்டது. அது தண்டனையாக ஏன் நினைத்தீர்கள். இதற்கு முன்பு சிவப்பு கம்பளம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டதோ என்று நினைத்து உங்களுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்ததற்கு வருத்தப்படுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் தேவையில்லாத விஷயங்களுக்காக உடைய வேண்டாம் எனக் கூறுகிறார்.
விஜய் சேதுபதியின் இந்த பாராட்டுக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் அனைத்து வாரங்களுக்கும் நாமினேஷன் செய்யப்பட்டாலும், மக்களிடம் பெறும் அதிகப்படியான வாக்குகளால், இன்னும் ஜாக்குலின் பிக் பாஸ் போட்டியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.