திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் – நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணை 1.85 டி.எம்.சி., கொள்ளளவுக் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிச்சாட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 3,600 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், நீர் இருப்பு 1.45 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர நீர் வளத்துறை அதிகாரிகள், பிச்சாட்டூர் அணையிலிருந்து, ஞாயிறு காலை 10 மணி முதல் உபரி நீரை திறந்து வருகின்றனர். அந்த நீர் விநாடிக்கு 500 கன அடி என திறக்கப்பட்டு வருகிறது. பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அவ்வாறு ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக விநாடிக்கு 3,200 கன அடியாக உள்ளது. ஆகவே, ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள தாராட்சி, பேரண்டூர், பெரியபாளையம், புதுவாயல், பெருவாயல், ஆலாடு, தத்தமஞ்சி, ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.