பிப்ரவரி 14 -ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் தங்கள் காதலைச் சொல்ல முயல்வார்கள். அப்படிச் சொல்பவர்கள் அனைவருக்கும் எதிர் தரப்பில் நல்ல பதில் கிடைப்பதில்லை. எனவே இந்த நாளில் யாரெல்லாம் காதலைச் சொல்லலாம்… சொல்லும் காதல் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வெற்றியாகும் என்பது குறித்து ஒரு ஜோதிட வழிகாட்டலைத் தரலாமே என்று ஜோதிடர் பாரதி ச்ரிதரிடம் கேட்டோம்.
“காதலர் தினத்துக்கெல்லாம் ராசிபலன் சொல்லும் வழக்கம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி அமைகிறது… அதிலும் குறிப்பாகக் காதல் வாழ்க்கை ஒருவருக்கும் அந்த நாளில் எப்படி இருக்கும் என்பனவற்றை ஓரளவு சொல்லமுடியும்.

காதல் என்று சொன்னாலே அது சுக்கிரன் சம்பந்தப்பட்டது. ஜோதிடத்தில் சுக்கிர பகவானை களத்திரகாரகன் என்பார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் காதல் கைகூடவும் திருமண வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்திடவும் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்க வேண்டும என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அழகு, கவர்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, இன்ப நுகர்ச்சி, வாசனை திரவியங்கள் பயன்படுத்துதல், வாழ்க்கைத்துணை அமைதல் என சகலத்துக்கும் அவரே காரகன். கோசாரத்தில் சுக்கிரன் எப்படி இருக்கிறார் என்பதைக் கொண்டு அந்த நாளில் காதல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை ஓரளவு சொல்லமுடியும். அந்த அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் பிப் – 14 ம் தேதி காதல் யோகம் எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11 – ம் இடத்தில் இருக்கிறார். எனவே காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குருவும் மூன்றில் இருப்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அவர்களுக்கு சாதக பதில் கிடைக்க வாய்ப்புண்டு.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 10 – ம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2 – ம் வீட்டில் இருக்கிறார். எனவே இவர்களுக்குக் காதல் கைகூடவும் அது திருமணத்தில் முடியவும் வாய்ப்புண்டு.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் குடும்பகாரகனான சந்திரன் 7 – ம் வீட்டில் இருந்து ராசியைப் பார்க்கிறார். சுக்கிரனும் சாதகமாக 9 – ம் வீட்டில் இருக்கிறார். எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் காதல் விஷயத்தில் மிகவும் சாதகமான நாளாக உள்ளது.

அடுத்து மூன்று ராசிகளான கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுப்பார்கள். அதீத நம்பிக்கையில் சிலவற்றைக் கொஞ்சம் ஓவராக செய்து சொதப்பிவிட வாய்ப்புண்டு.
கடகத்துக்கு 2 -ல் கேது, 8 -ல் சுக்கிரன் ராகு, சிம்மத்துக்கு அஷ்டம சனி, 7 -ல் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் ராசிக்குள் கேது, கன்னிக்கு 7 -ல் சனி 6 -ல் சுக்கிரன் ராகு என கிரகநிலை இருப்பதால் காதல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உச்சமாக இருப்பதால் காதல், திருமணம் ஆகியன கூடிவரும் நேரம் இது. மேலும் சந்திரனும் மூன்றில் இருக்கிறார் என்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அதற்கு சாதகமான பதில்வர வாய்ப்பிருக்கிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் இன்னும் ஆறு மாதத்துக்குக் காதலைச் சொல்வதை தள்ளிப்போடுவது நல்லது. குரு சாதகமில்லாதபோது அதை முயல்வது கத்திமேல் நடப்பதுபோன்றது. வார்த்தைகளால் வம்பு வரலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 7 -ல் குரு, 3 -ல் சுக்கிரன் ராகு. எனவே தைரியமாக காதலைச் சொல்வார்கள். இவர்களின் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.
மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். ஜூன் மாதத்துக்குப் பின் திருமணம் கூடிவரும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள்ளேயே சுக்கிரன் இருப்பதால் காதல் உணர்வுகள் மிகுதியாக இருக்கும். குடும்பகாரகன் குரு சாதகமாக 5 -ல் இருப்பதால் திருமண யோகமும் உண்டு. எனவே காதலைச் சொல்லலாம். ஓரளவு சாதக பதிலே கிடைக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சனி இருக்கிறார். சுக்கிரன் மறைவாக 12 -ல் இருக்கிறார். எனவே ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம். இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போடுங்கள். வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
மேலே சொல்லப்பட்டவை கோசார அடிப்படையில் ஆன பலன்கள் மட்டுமே. அவரவர் சுய ஜாதகம் மூலமே துல்லியமான பலன்களைச் சொல்லமுடியும். இவை ஒரு சிறு வழிகாட்டல் மட்டுமே” என்று கூறினார் ஜோதிடர் பாரதி ச்ரிதர்.!