குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிஹார் தேர்தல் முடிவு. சொந்த மாநிலமான பிஹாரில் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஜன் சுராஜ் கட்சி சார்பில் 238 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கினார். 150 இடங்களில் வெற்றி நிச்சயம் என்றார். ஆனால், போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி. டெபாசிட்கூட 2 தொகுதிகளில் மட்டும்தான் கிடைத்தது.
ஊருக்கெல்லாம் ஆலோசனை சொன்னவர் சறுக்கியது ஏன்? பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே வேலை செய்த அத்தனை தலைவர்களுக்கும் அவர்களது கட்சி என்கிற கட்டமைப்பு மிக வலுவாக இருந்தது. அந்த வலுவான கட்டமைப்பில் சில உத்திகளை புகுத்தி, பல வியூகங்களை வகுத்து அதை மக்கள் மத்தியில் எடுபடச் செய்து அதன்மூலம் அரசியலில் ஜொலிக்கச் செய்ய அவரால் முடிந்தது. எனவே, வியூகம் வகுப்பதைவிட கட்சி கட்டமைப்புதான் முக்கியம் என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல். தமிழகத்தில் இது தவெகவுக்கான செய்தி.
கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்ற இருவரை மையப்படுத்தியே செயல்பட்டு வரும் தவெகவுக்கு அடிப்படை கட்டமைப்பு மற்ற பிரதான கட்சிகள் அளவுக்கு இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதனால், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தாமல் வெறும் வியூகத்தை மட்டுமே நம்பி களமிறங்குவது வெற்றியை தேடித் தராது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ரசிகர்களுக்கான தலைவர் என்பதைக் கடந்து, பனையூரைவிட்டு வெளியே வந்து முழுநேர அரசியல்வாதியாக விஜய் மாறினால் மட்டுமே பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்டதுபோன்ற நிலைமையை தவிர்க்கலாம் என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.