சென்னை: தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது. இதேபோல், கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ. 2.20 லட்சம் வரை அபராதம் விதித்தது.
இதுகுறித்து பேருந்து உரிமையாளர்கள் கேட்டபோது, ‘‘2021-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ படி தமிழகத்தில் அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, நாங்களும் வசூலிக்கிறோம்’’ என கேரள, கர்நாடக போக்குவரத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அந்தந்த மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டுக்கு தமிழக சாலைவரி ரூ.1,50,000, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா, கர்நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4.50 லட்சம் செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆம்னி பேருந்துகளுக்கு தனித்துவமான பெர்மிட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.
வரித்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு கான வேண்டும்” என்றனர். இதனிடையே, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நேற்று சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்வதால் இனி மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது.
மாநிலத்துக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஆந்திராவுக்கு 70 பேருந்துகளும், கர்நாடகாவுக்கு 183 பேருந்துகளும், கேரளாவுக்கு 85 பேருந்துகளும் இயக்க பெரிமிட் உள்ளது. தேவை இருக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.