முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். அந்த தொகுதியல் கடந்த 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.
பாலியல் வீடியோ
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா திடீரென தலைமறைவானார். அவரை சிறப்பு புலனாய்பு பிரிவு போலீசார் தேடிவந்தனர்.
விசாரணையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றது தெரிந்தது. அவர் நாடு திரும்ப கட்சி, குடும்பம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்’’ என்று கூறி இருந்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா கைது
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா நேற்று (30ந்தேதி)நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரை பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமன் டி பென்னேகர் மற்றும் சீமா லட்கர் தலைமையிலான 5 பெண் போலீசார் கொண்ட சிறப்பு குழுவினர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விசாரணைக்குஅழைத்துச் சென்றனர்.
12 மணிநேரம் விசாரணை
பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கிட்டத்தட்ட சுமார் 12 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனை செய்து மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு வேண்டும் தெரிவித்தனர்.பிரஜ்வல் ரேவண்ணா சார்பாக வாதிட்ட வக்கீலின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
6நாட்கள் காவல்
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறும்போது,“பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் யாரேனும் இருப்பின் தாமாக முன்வந்து புகாரளிக்குமாறு முன்பே கூறியுள்ளோம்.
இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுக்கு பிரஜ்வல் ரேவண்ணா தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிகிறது என்றார்.