கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார்.
அங்கு கடந்த 26-&ந்தேதி அங்கு வாக்குப்பதிவு டைபெற்ற நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பல பெண்களை மிரட்டி பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து இருப்பது தெரிந்தது.
போலீசார் சம்மன்
பிரஜ்வல் ரேவண்ணா மீது 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது ரேவண்ணா மீது 2 வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஜ்வல், எச்.டி.ரேவண்ணா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பிரஜ்வல் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ரேவண்ணா முன்ஜாமின் கேட்டு கோர்ட்டி மனுதாக்கல் செய்து உள்ளார்.இந்த வழக்கு தொடார்பாக ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அடுத்த கட்ட நவடிக்கை என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடிதம்
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் கடமை உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ரேவண்ணா கைது
இந்த நிலையில் ரேவண்ணாவை இன்று(4ந்தேதி) இரவு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்தனர். அவரை விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீஸ் வரமாட்டார்கள் என நினைத்து அவர் தேவகவுடா வீட்டில் பதுங்கியிருந்ததாக தகவல். இதை கண்டறிந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேவகவுடா வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படதும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் ரேவண்ணாவை கைது செய்ய வீட்டிற்கு சென்றபோது, ஜோதிடரின் ஆலோசனைப்படி மாலை 6.50 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து போலீசாருடன் சென்றதாக கூறப்படுகிறது.