கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தேதி வெளியானது.
தலைமறைவானார்
இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் அவர் தலைமறைவாகவே உள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரஜ்வல் எங்கிருந்தாலும் உடனடியாக இந்தியா திரும்பி விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தேவகவுடா சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தார்.
பிரஜ்வல் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்களைக் கோரும் ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ ஏற்கனவே இன்டர்போல் மூலம் வெளியிடப்பட்டது.
31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன்
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கடந்த 18 ந்தேதி அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது
இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் வெளியே வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
மேலும், தனது குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். “எனது வெளிநாட்டுப் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஹசன் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நான் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். பயணத்தின்போதுதான் என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எனக்கு தெரிய வந்தது.
எனக்கு எதிராக ஓர் அரசியல் சதி உருவாக்கப்பட்டது. நான் நிச்சயமாக மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். அதன் பிறகு என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.