தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், “நாளை மதியம் 1:30 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெறும் விழாவில் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
கொச்சி பிபிசிஎல் (BPCL) சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5,500 கோடி மதிப்பிலான ‘பாலிப்ரோப்பிலீன்’ (Polypropylene) உற்பத்தி பிரிவிற்கு அடிக்கல். ரூ.2,650 கோடி மதிப்பிலான என்.ஹெச்-66 சாலைத் திட்டம் மற்றும் கோழிக்கோடு புறவழிச்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும், ஷோரனூர் – நிலம்பூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் தொடங்கி வைத்து, பாலக்காடு – பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். கேரளப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் திருச்சி வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் ‘சிட்டி கேஸ்’ (City Gas) விநியோகக் கட்டமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை மணலியில் ரூ.1,490 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) லூப் கலவை ஆலையை (Lube Blending Plant) அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தமிழகத்திலிருந்து தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியாவுக்குச் செல்லும் வகையில் 2 அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 3 புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் (PMGSY) தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை அவர் திறந்து வைக்கிறார். மேலும், கங்கை கொண்ட சோழபுரம் அருகே அமையும் புதிய புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.