திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தூத்துக்குடிக்கு வரும் பிரதமரை, பாஜகவினர் 25 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், திமுகவில் இணைந்துள்ள அன்வர் ராஜா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அன்வர் ராஜா அதிமுகவில்தான் இருந்தார். இப்போது அவருக்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. உலகம் போற்றும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வாழும் ராஜேந்திர சோழனாக அவர் இருக்கும் நிலையில், அவரால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.